Friday 18 November 2016

எழுதனும்..

ஆசை தொடர்கிறது. என்ன எழுதலாமென்று சிந்திக்கையில் என்னென்னவோ தோன்றுகிறது.

*எனது அனுபவத்தை எழுதலாமா...?
_மற்றவர்களுக்கு இல்லாத அனுபவமா..? எனக்கு என்ன புதிதாக ஏற்பட்டிருக்கும். அவர்கள் வாழும் நாட்டில்.. அவர்கள் வாழும் சமகாலத்தில்தானே நானும் இருக்கிறது. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

* சினிமா பற்றி எழுதலாமா..?
_சினிமா எடுத்து அதன் மூலம் சொல்லமுடியாத கருத்தையா சினிமா பார்த்த நாம் சொல்லிவிடப் போகிறோம்..? அதையும் தாண்டி யோசிக்கையில் சினிமா பற்றி எழுதி என்ன சாதித்து சமூகத்தை மாற்றிவிடப் போகிறோம்...? தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*அரசியல் பற்றியாவது எழுதலாமா..?
_அதை பற்றி எழுதி...? யாருக்காக எழுதவேண்டும்...? அரசியலை சிந்திக்க  ஆரம்பித்தால் கோபம் தலைக்கேறி ரத்தக் கொதிப்பு அதிகமாகி பெருமூளை சிந்திப்பதையும் சிறுமூளை அடக்கிவிடுமே..? அந்த சாக்கடை நமக்கு வேண்டாம். தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*பெண்களுக்காக எழுதலாமா..?
_பெண்களுக்கான கொடுமைகள் பற்றி சிந்திக்கும் அதேவேளை "குடித்துவிட்டு அடித்தான் என்பதான் கணவனை வெட்டி சாய்த்த பெண்" என்று செய்தி வந்து பெண்களுக்காக நாம் ஒன்றும் சொல்வதற்கே இல்லை என்று மனம் ஒருகணம் அதிர்கிறது. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*குழந்தைகளுக்காக எழுதலாமா...?
_குழந்தைகளுக்காக எழுதவேண்டுமானால் நம் அனுபவம் பத்தாது. அவர்களிடம் நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களிடம் அவ்வளவு லேட்டஸ்ட் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதற்கான அப் டேட்  விஷயங்கள் நம்மிடம் இல்லை. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*மிருகங்கள் பற்றி எழுதலாமா..?
_ஓ எழுதலாமே. அதுதான் பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவைகள் நாம் எழுதுவதை படிக்கப்போவதில்லை. உடனே பேனாவை எடுத்தேன். என்ன எழுதலாம்..? தவிக்கிறது மனம். ஆனால் மழையை நினைத்தால் மிருகங்களையும் இழுக்க முடியவில்லை. 

நீருக்காக மிருகங்கள் நமை வதைக்கும் நாள் தொலைவில் இல்லை.