Monday 26 November 2018

டாக்டர் மின்னூர் சீனிவாசன் அவர்களின் 
'மறக்க முடியாத உரைமணிகள்'  .............


திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை  உரையாற்றும்போது 'எனக்கு ஓர் மலையாளியைத் தெரியும்' என்றார்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த   அன்பர்கள் வியப்போடு இருந்தார்கள். 

பின்பு வாரியார், 'கயிலை மலையில் இருந்துகொண்டு ஆட்சி செய்யும் சிவபெருமான் மலையாளிதானே?" என்றார். கூட்டத்தினர் கலகலவென்று சிரித்தார்கள். அதைப் பார்த்துவிட்டு 'நீங்கள் பக்கத்து மாநிலத்தை நினைத்துக் கொண்டீர்கள் போல' என்றார்.

++++++++

தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதன் வீட்டில் வேலைக்கார அம்மாள் கூட்டிப் பெருக்க வந்தார். அந்த அம்மையார் சற்று பருமன். கிவாஜ வேலைக்கார அம்மாள் பெயரைக் குறிப்பிட்டு 'விசாலம்,  இன்னும் பெருக்கனுமா?' என்றார்.

++++++++++++

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடையில் பேசத் தொடங்கினார். அப்போது மழையும் தூறத் தொடங்கியது. அதைப் பார்த்த தேவர், 'அன்பர்களே, அப்படியே இருங்கள். மழைதானே பெய்கிறது? நீங்கள் என்ன விதைகளா முளைத்து விடுவதற்கு?' என்றார். கூட்டத்தினர் கலையாமல் தேவரின் பேச்சை கேட்டனர்.

+++++++++++

கலைஞர் கருணாநிதி பயணம் செய்து கொண்டிருந்த போது சகுந்தலையின் கதையை ஒருவர் விவரித்தார். சகுந்தலையை நேசித்த மன்னர் பெயரை அவரால் சொல்ல முடியவில்லை. அப்போது கலைஞர், 'அந்த கதையே மறந்து போகிற கதைதானே..? அதனால் துஷ்யந்தன் பெயர் மறந்து போனாலென்ன?' என்று சிரித்தார்.

++++++++++++++

டாக்டர் உ.வே.சாமிநாதையர் சமஸ்தான அரசர் ஒருவரிடம் உதவி கேட்கப் போனார். 'வாருங்கள், அமருங்கள்' என்று சமஸ்தான அரசர் ஐயரை வரவேற்றார். உடனே சாமிநாதையர் பக்கத்தில் அமர வைத்து சம ஸ்தானத்தையே கொடுத்துவிட்டீர்கள், நான் கேட்க வந்த உதவி எம்மாத்திரம்?" என்று பதிலளித்தார்.

+++++++++++++

கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களைக் கல்லூரி மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அப்போது கிருத்துவம், இஸலாம், இந்து சமயம் ஆகியவை இருக்கின்றனவே.. உங்களுக்கு எம்மதம் பிடிக்கும்?" என்றார்கள். உடனே கலைவாணர், 'எனக்கு மதம் பிடிக்காது. யானைக்குத்தான் மதம் பிடிக்கும்." என்றார்.

++++++

தமிழ்த் தென்றல் திருவிக ஆறு ஆண்டுகள் மட்டுமே குடும்ப வாழ்வு நடத்தினார். அவர் வாழ்க்கைத் துணைவியார் மறைந்தார். பின்பு  பரிவோடு பலர் "தாங்கள் தனியாகத்தான்  இருக்கின்றீர்களா?' என்றார்கள். அதற்கு திருவிக, 'தனியாக எங்கே? தமிழோடு இருக்கிறேன்" என்றார்.