Monday 26 November 2018

டாக்டர் மின்னூர் சீனிவாசன் அவர்களின் 
'மறக்க முடியாத உரைமணிகள்'  .............


திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை  உரையாற்றும்போது 'எனக்கு ஓர் மலையாளியைத் தெரியும்' என்றார்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த   அன்பர்கள் வியப்போடு இருந்தார்கள். 

பின்பு வாரியார், 'கயிலை மலையில் இருந்துகொண்டு ஆட்சி செய்யும் சிவபெருமான் மலையாளிதானே?" என்றார். கூட்டத்தினர் கலகலவென்று சிரித்தார்கள். அதைப் பார்த்துவிட்டு 'நீங்கள் பக்கத்து மாநிலத்தை நினைத்துக் கொண்டீர்கள் போல' என்றார்.

++++++++

தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதன் வீட்டில் வேலைக்கார அம்மாள் கூட்டிப் பெருக்க வந்தார். அந்த அம்மையார் சற்று பருமன். கிவாஜ வேலைக்கார அம்மாள் பெயரைக் குறிப்பிட்டு 'விசாலம்,  இன்னும் பெருக்கனுமா?' என்றார்.

++++++++++++

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடையில் பேசத் தொடங்கினார். அப்போது மழையும் தூறத் தொடங்கியது. அதைப் பார்த்த தேவர், 'அன்பர்களே, அப்படியே இருங்கள். மழைதானே பெய்கிறது? நீங்கள் என்ன விதைகளா முளைத்து விடுவதற்கு?' என்றார். கூட்டத்தினர் கலையாமல் தேவரின் பேச்சை கேட்டனர்.

+++++++++++

கலைஞர் கருணாநிதி பயணம் செய்து கொண்டிருந்த போது சகுந்தலையின் கதையை ஒருவர் விவரித்தார். சகுந்தலையை நேசித்த மன்னர் பெயரை அவரால் சொல்ல முடியவில்லை. அப்போது கலைஞர், 'அந்த கதையே மறந்து போகிற கதைதானே..? அதனால் துஷ்யந்தன் பெயர் மறந்து போனாலென்ன?' என்று சிரித்தார்.

++++++++++++++

டாக்டர் உ.வே.சாமிநாதையர் சமஸ்தான அரசர் ஒருவரிடம் உதவி கேட்கப் போனார். 'வாருங்கள், அமருங்கள்' என்று சமஸ்தான அரசர் ஐயரை வரவேற்றார். உடனே சாமிநாதையர் பக்கத்தில் அமர வைத்து சம ஸ்தானத்தையே கொடுத்துவிட்டீர்கள், நான் கேட்க வந்த உதவி எம்மாத்திரம்?" என்று பதிலளித்தார்.

+++++++++++++

கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களைக் கல்லூரி மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அப்போது கிருத்துவம், இஸலாம், இந்து சமயம் ஆகியவை இருக்கின்றனவே.. உங்களுக்கு எம்மதம் பிடிக்கும்?" என்றார்கள். உடனே கலைவாணர், 'எனக்கு மதம் பிடிக்காது. யானைக்குத்தான் மதம் பிடிக்கும்." என்றார்.

++++++

தமிழ்த் தென்றல் திருவிக ஆறு ஆண்டுகள் மட்டுமே குடும்ப வாழ்வு நடத்தினார். அவர் வாழ்க்கைத் துணைவியார் மறைந்தார். பின்பு  பரிவோடு பலர் "தாங்கள் தனியாகத்தான்  இருக்கின்றீர்களா?' என்றார்கள். அதற்கு திருவிக, 'தனியாக எங்கே? தமிழோடு இருக்கிறேன்" என்றார்.



Friday 18 November 2016

எழுதனும்..

ஆசை தொடர்கிறது. என்ன எழுதலாமென்று சிந்திக்கையில் என்னென்னவோ தோன்றுகிறது.

*எனது அனுபவத்தை எழுதலாமா...?
_மற்றவர்களுக்கு இல்லாத அனுபவமா..? எனக்கு என்ன புதிதாக ஏற்பட்டிருக்கும். அவர்கள் வாழும் நாட்டில்.. அவர்கள் வாழும் சமகாலத்தில்தானே நானும் இருக்கிறது. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

* சினிமா பற்றி எழுதலாமா..?
_சினிமா எடுத்து அதன் மூலம் சொல்லமுடியாத கருத்தையா சினிமா பார்த்த நாம் சொல்லிவிடப் போகிறோம்..? அதையும் தாண்டி யோசிக்கையில் சினிமா பற்றி எழுதி என்ன சாதித்து சமூகத்தை மாற்றிவிடப் போகிறோம்...? தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*அரசியல் பற்றியாவது எழுதலாமா..?
_அதை பற்றி எழுதி...? யாருக்காக எழுதவேண்டும்...? அரசியலை சிந்திக்க  ஆரம்பித்தால் கோபம் தலைக்கேறி ரத்தக் கொதிப்பு அதிகமாகி பெருமூளை சிந்திப்பதையும் சிறுமூளை அடக்கிவிடுமே..? அந்த சாக்கடை நமக்கு வேண்டாம். தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*பெண்களுக்காக எழுதலாமா..?
_பெண்களுக்கான கொடுமைகள் பற்றி சிந்திக்கும் அதேவேளை "குடித்துவிட்டு அடித்தான் என்பதான் கணவனை வெட்டி சாய்த்த பெண்" என்று செய்தி வந்து பெண்களுக்காக நாம் ஒன்றும் சொல்வதற்கே இல்லை என்று மனம் ஒருகணம் அதிர்கிறது. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*குழந்தைகளுக்காக எழுதலாமா...?
_குழந்தைகளுக்காக எழுதவேண்டுமானால் நம் அனுபவம் பத்தாது. அவர்களிடம் நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களிடம் அவ்வளவு லேட்டஸ்ட் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதற்கான அப் டேட்  விஷயங்கள் நம்மிடம் இல்லை. தவிர்க்கிறது மனம். வேறேதாவது எழுதலாம்.

*மிருகங்கள் பற்றி எழுதலாமா..?
_ஓ எழுதலாமே. அதுதான் பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவைகள் நாம் எழுதுவதை படிக்கப்போவதில்லை. உடனே பேனாவை எடுத்தேன். என்ன எழுதலாம்..? தவிக்கிறது மனம். ஆனால் மழையை நினைத்தால் மிருகங்களையும் இழுக்க முடியவில்லை. 

நீருக்காக மிருகங்கள் நமை வதைக்கும் நாள் தொலைவில் இல்லை.



Monday 13 April 2015

மனிதன்....!

தினமும் என் அலுவலகத்துக்கு ஒரு பிச்சைக் காரர்  வருவார். அவ்வப்போது ஒரு ரூபாய்  முதல் ஐந்து  ரூபாய் வரை கொடுப்பேன். வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் நின்று  பார்த்துவிட்டு  போவார். எதுவுமே பேசினதில்லை.
பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரன் போல பார்ப்பார்கள். காரணம் அந்தப் பிச்சைக்காரர் யாரிடமும் அந்த அளவுக்கு நெருங்கிப் போனதில்லை. அப்படி என்னவோ என் மீது மட்டும்  பாசம்..!

மீண்டும் நேற்று வந்தவர்,  நான் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவே இல்லை. 'என்னாச்சு' என்றேன். 'ஒரு எழுபது காசு கொடு. டீ சாப்பிடணும்' என்றார். நானும் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாய்  கொடுத்து 'அந்த டீக்கடைல கொடுத்து டீ சாப்பிட்டு போ' என்றேன். 

வாங்கிக் கொண்டு சென்றவர், சற்று நேரத்தில் திரும்பி வந்து 
'டீ இல்லை' என்றார். ஏன் என்றதற்கு 
'அவன் கொடுக்க  மாட்டுக்கான்' என்றார். உடனே  நானே டீக்கடைக்கு போய் காசு கொடுத்து டீ கொடுக்க சொன்னேன். அதை வாங்கி குடித்துவிட்டு போய் விட்டார்.

இன்று மீண்டும் வந்தார். டீ குடிக்கணும் என்றார். நானும் காசைக் கொடுத்து, 'இதை டீ கடையில் கொடுத்து டீ கேளு
டீ கொடுப்பார்' என்றேன். அவரும் சென்று டீ வாங்கிக் குடித்துவிட்டு பாதிக்'கப்' அளவுக்கு டீயைக் கொண்டு வந்து என் மேசையில் வைத்துவிட்டு 'நீ குடி'  என்றார்.

இப்போது யோசிக்கிறேன்.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட 'அந்த' மனிதன் எப்படி, இப்படி  ஆனார் என்று. 

எல்லாம் கடவுள் சித்தம். ஆனால் அவன் செயல்களுக்கு  காரணம்தான்  புரியவில்லை.

பிச்சைகாரர்கள் உருவில் சில நல்லவர்கள்.!
நல்லவர் உருவில் பல பைத்தியக்காரர்கள்..!!


Saturday 11 April 2015

வாழ்க்கை...! கனவுகள்...!!

மொத்தம் ஒன்பது பேர். நான்  குடும்பத்தின்  கடைக் குட்டி. நான்கு அக்காக்கள். நான்கு  அண்ணன்கள்.
இப்போதுதான் குடும்பத்திற்கு  ஒரு வாரிசு  இருந்தால்  போதும் என்று  நினைக்கிறோம். முன்னோர்  அப்படி  நினைத்ததாகத்  தெரியவில்லை. அப்படி நினைத்திருந்தால் நான் இந்த உலகத்தில் ஜனித்திருக்கவே முடியாது. அதை நினைத்தாலும்  பகீர் என்றுதான்  இருக்கிறது. இருந்தாலும்  எனக்கு  ஒரு வாரிசுதான். என்னால்  இயன்றவரை  இந்தியாவின் ஜனத்தொகையைக் குறைத்திருக்கிறேன்.

1986ல் +2 முடித்துவிட்டு முன்னொரு ஏப்ரல் மாதத்தில் ஏகப்பட்டக்  கனவுகளுடன் அண்ணன் குருவுடன் நாகப்பட்டினத்திலிருந்து பஸ் ஏறினேன். காலையில் சென்னை பாடியிலுள்ள ஸ்ரீனிவாச நகரில் காலடி வைத்தேன். ஒரு அண்ணனுடன்  சென்னை வந்து மூத்த அண்ணனின்  வீட்டிலிருந்து மேற்படிப்பு என்பதுதான்  திட்டம். என்னை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அண்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். என்னென்னவோ கனவுகள். நன்றாக  படித்து  நல்ல  வேலைக்கு சென்று எல்லோருக்கும் உதவவேண்டும் என்பதுதான் அப்போதைய என்னுடைய குறிக்கோளாக இருந்தது. காரணம் குடும்பத்தின் வறுமை. ஊரிலிருந்த ஒரே அண்ணனின் உழைப்பில் குடும்பமே வாழ்ந்து கொண்டிருந்த சூழல்.

ஒரு வழியாக  இரண்டு நாட்கள் பாடி வாழ்க்கையை முடித்து பெரம்பூருக்கு மூத்த  அண்ணன் வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். அவர் பெரம்பூரிலுள்ள  ஒரு பள்ளியில்  தமிழாசிரியர். அந்த  நம்பிக்கையில்தான் சென்னையே  வந்தேன். ஆசிரியர்களுக்கு  அறிவு அதிகம் என்பது முட்டாள்தனம் என்பது பின்னாளில்தான் என்னால் உணர முடிந்தது.  பத்துநாட்களில் கல்லூரி  செல்லும் கனவுகளுடன் மூன்று மாதங்கள் கனவிலேயே கழிந்தது. "காலேஜ் போறதெல்லாம் வேஸ்ட். கரஸ்பாண்டன்ஸ்ல சேர்த்துவிடறேன். வீட்டிலிருந்தே நன்றாக படிக்கலாம்." இது எனது வாத்தியார் அண்ணனின்  அறிவுரை. சரி அண்ணன் சொன்னால்  சரியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் மெட்ராஸ் யூனிவர்சிட்டி அட்மிஷன் முடியும் தருவாயிலும் என்னை கல்லூரியில் சேர்க்கும்  எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.

மே மாதம் தாண்டியதும்தான் வாத்தியாரின் திட்டமே  எனக்குப் புரிந்தது. வீட்டுக்கு  வேலைக் காரன் கிடைத்ததுடன் வீட்டில் நடக்கும் டியூஷன் பார்த்துக் கொள்ள ஒரு ஏமாளியாக ஆனேன் என்பது. அப்பாவிடம் கம்ப்ளைன்ட் செய்து, வாத்தியாரின் மனைவியிடம் கெஞ்சிக் கூத்தாடி  ஒருவழியாக B.Com., சேர்ந்தேன். ஆறுமாதங்கள் கடந்தும் ஒரு வகுப்புக்கும் செல்லமுடியாமல் நேரமின்றி கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர்  அடித்து  கொடுப்பதற்கும், குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கும், மாலை நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட டியூஷன் பசங்களை மேய்ப்பதிலுமே நேரம் போனது.

இறுதியில் பொறுமையிழந்து, என்னை Electronics Class சேர்த்துவிடு' என்று முகப்பேரில் இருந்த இன்னொரு  அண்ணனிடம் போனேன். அவரின் இயலாமையிலும் எனக்கு  மாதம் ஐநூறு ரூபாய்க் கொடுத்து வகுப்பில் சேர்த்துவிட்டார். மாலையில் இரண்டு மணிநேரம். மற்ற நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் வாத்தியாரின் இன்னொரு தொழிலான போட்டோ எடுப்பதில் அவ்வப்போது மவுண்ட் ரோடு சென்று பிரிண்ட் போடும் இடம் என் கண் முன் வந்தது. உடனே மவுண்ட் ரோடு கிளம்பி அந்த கடையில்  வேலை இருந்தால் கொடுங்கள் என்றேன். சம்பளமெல்லாம் இல்லை. முதலில்  வேலைக் கற்றுக் கொள் என்றார்கள். சரி என்று சேர்ந்தேன். அதற்கு போய் வரும் செலவு பாடி அண்ணன் வசம். 

ஒருவழியாக பெரம்பூரில்  ஆறுமாதம், முகப்பேரில்  ஆறுமாதம் பிழைப்புக்கு  வழிதேடிக் கொண்டபின் எனது  திறமை காரணமாக நாகராஜ ராவ் அவர்களிடம் வேலைக்கு சேர்ந்து அப்பப்பா முப்பதாண்டுகள் ஓடிவிட்டன... ! வாழ்க்கை நினைப்பதுபோல  இருப்பதில்லை.

இப்போது  நானும் ஒரு ஒளிப்படக் கலைஞன்..!!!!





Monday 5 May 2014

ஐயப்பன்.........

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் !

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.


சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.


அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

சங்கு பெற்ற கதை:-
சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சசைனம் எனப்பெயர் பெற்றது.

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சக்கரம் பெற்ற கதை:-
சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது சரிதானே! சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும் அல்லவா !.

Sunday 23 February 2014

சிவன் ராத்திரி

சிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்பது புகழ்பெற்ற ஒரு இந்து பண்டிகையாகும். இதனை ஒவ்வொரு வருடமும், இந்து ஆண்டுக் குறிப்பேட்டின் படி, மாசி மாதத்தின் 13 ஆம் தேதி இரவு அல்லது 14 ஆம் தேதி இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து, சிவபெருமனை புகழ்ந்து மந்திரங்களும் ஸ்லோகங்களும் படிப்பார்கள். பகல் மற்றும் இரவு முழுவதும் பலர் விரதம் இருக்கவும் செய்வார்கள். சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் வில்வ இலைகளை படைத்த பின்னரே காலை உணவை உட்கொள்வார்கள். சிவராத்திரி பண்டிகை பெண்களுக்காக விசேஷ முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. திருமணமாகாத பெண்கள், சிவபெருமானை போலவே நல்ல கணவன் அமைய அவரை வணங்குவார்கள். திருமணமான பெண்கள், தங்கள் கணவரும் குடும்பமும் நல்ல படியாக சீரும் சிறப்புமாக இருக்க வணங்குவார்கள்.
சமுத்ர மந்தன் புராணம் : நீலகண்டா கதை தான் அனைத்தையும் விட புகழ் பெற்ற புராணமாக விளங்குகிறது. பாற்கடலை கடைந்ததன் விளைவாக உருவான நஞ்சை, இந்நாளில் சிவபெருமான் உட்கொண்டதால் தான் மகாசிவராத்திரி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாக நம்பப்படுகிறது. அந்த கொடிய நஞ்சு அவரின் தொண்டை குழியில் தேங்கியதால், அவரை நீலகண்டர் அல்லது ஊதா நிறத் தொண்டையை கொண்ட தெய்வம் என்று அழைக்கிறார்கள்.
சிவபெருமானுக்கு விருப்பமான தினம் பங்குனி மாதம் 14-ஆம் நாள் என்பது சிவபெருமானின் விருப்பமான தினம் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே இத்திருவிழா இந்நாளில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் புராணத்தின் படி, மகாசிவராத்திரியின் போது தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்று அவர் ஒரு குடும்பஸ்தராக மாறினார்.   
சிவராத்திரியின் முக்கியத்துவம்: மகா சிவராத்திரியின் போது, சிவபெருமான் மனித இனத்திற்கு மிகவும் அருகாமையில் வருவார் என்று நம்பப்படுகிறது. நடுநிசியில், இறைத்தன்மையும், நேர்மறையான அதிர்வும் மனித இதயத்திற்கு அருகில் கிட்டும். அதனால் தான் சிவராத்திரியின் போது அனைவரும் விழித்திருக்கிறார்கள்.