Monday 13 April 2015

மனிதன்....!

தினமும் என் அலுவலகத்துக்கு ஒரு பிச்சைக் காரர்  வருவார். அவ்வப்போது ஒரு ரூபாய்  முதல் ஐந்து  ரூபாய் வரை கொடுப்பேன். வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் நின்று  பார்த்துவிட்டு  போவார். எதுவுமே பேசினதில்லை.
பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரன் போல பார்ப்பார்கள். காரணம் அந்தப் பிச்சைக்காரர் யாரிடமும் அந்த அளவுக்கு நெருங்கிப் போனதில்லை. அப்படி என்னவோ என் மீது மட்டும்  பாசம்..!

மீண்டும் நேற்று வந்தவர்,  நான் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவே இல்லை. 'என்னாச்சு' என்றேன். 'ஒரு எழுபது காசு கொடு. டீ சாப்பிடணும்' என்றார். நானும் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாய்  கொடுத்து 'அந்த டீக்கடைல கொடுத்து டீ சாப்பிட்டு போ' என்றேன். 

வாங்கிக் கொண்டு சென்றவர், சற்று நேரத்தில் திரும்பி வந்து 
'டீ இல்லை' என்றார். ஏன் என்றதற்கு 
'அவன் கொடுக்க  மாட்டுக்கான்' என்றார். உடனே  நானே டீக்கடைக்கு போய் காசு கொடுத்து டீ கொடுக்க சொன்னேன். அதை வாங்கி குடித்துவிட்டு போய் விட்டார்.

இன்று மீண்டும் வந்தார். டீ குடிக்கணும் என்றார். நானும் காசைக் கொடுத்து, 'இதை டீ கடையில் கொடுத்து டீ கேளு
டீ கொடுப்பார்' என்றேன். அவரும் சென்று டீ வாங்கிக் குடித்துவிட்டு பாதிக்'கப்' அளவுக்கு டீயைக் கொண்டு வந்து என் மேசையில் வைத்துவிட்டு 'நீ குடி'  என்றார்.

இப்போது யோசிக்கிறேன்.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட 'அந்த' மனிதன் எப்படி, இப்படி  ஆனார் என்று. 

எல்லாம் கடவுள் சித்தம். ஆனால் அவன் செயல்களுக்கு  காரணம்தான்  புரியவில்லை.

பிச்சைகாரர்கள் உருவில் சில நல்லவர்கள்.!
நல்லவர் உருவில் பல பைத்தியக்காரர்கள்..!!


No comments:

Post a Comment