Monday 13 April 2015

மனிதன்....!

தினமும் என் அலுவலகத்துக்கு ஒரு பிச்சைக் காரர்  வருவார். அவ்வப்போது ஒரு ரூபாய்  முதல் ஐந்து  ரூபாய் வரை கொடுப்பேன். வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் நின்று  பார்த்துவிட்டு  போவார். எதுவுமே பேசினதில்லை.
பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரன் போல பார்ப்பார்கள். காரணம் அந்தப் பிச்சைக்காரர் யாரிடமும் அந்த அளவுக்கு நெருங்கிப் போனதில்லை. அப்படி என்னவோ என் மீது மட்டும்  பாசம்..!

மீண்டும் நேற்று வந்தவர்,  நான் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவே இல்லை. 'என்னாச்சு' என்றேன். 'ஒரு எழுபது காசு கொடு. டீ சாப்பிடணும்' என்றார். நானும் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாய்  கொடுத்து 'அந்த டீக்கடைல கொடுத்து டீ சாப்பிட்டு போ' என்றேன். 

வாங்கிக் கொண்டு சென்றவர், சற்று நேரத்தில் திரும்பி வந்து 
'டீ இல்லை' என்றார். ஏன் என்றதற்கு 
'அவன் கொடுக்க  மாட்டுக்கான்' என்றார். உடனே  நானே டீக்கடைக்கு போய் காசு கொடுத்து டீ கொடுக்க சொன்னேன். அதை வாங்கி குடித்துவிட்டு போய் விட்டார்.

இன்று மீண்டும் வந்தார். டீ குடிக்கணும் என்றார். நானும் காசைக் கொடுத்து, 'இதை டீ கடையில் கொடுத்து டீ கேளு
டீ கொடுப்பார்' என்றேன். அவரும் சென்று டீ வாங்கிக் குடித்துவிட்டு பாதிக்'கப்' அளவுக்கு டீயைக் கொண்டு வந்து என் மேசையில் வைத்துவிட்டு 'நீ குடி'  என்றார்.

இப்போது யோசிக்கிறேன்.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட 'அந்த' மனிதன் எப்படி, இப்படி  ஆனார் என்று. 

எல்லாம் கடவுள் சித்தம். ஆனால் அவன் செயல்களுக்கு  காரணம்தான்  புரியவில்லை.

பிச்சைகாரர்கள் உருவில் சில நல்லவர்கள்.!
நல்லவர் உருவில் பல பைத்தியக்காரர்கள்..!!


Saturday 11 April 2015

வாழ்க்கை...! கனவுகள்...!!

மொத்தம் ஒன்பது பேர். நான்  குடும்பத்தின்  கடைக் குட்டி. நான்கு அக்காக்கள். நான்கு  அண்ணன்கள்.
இப்போதுதான் குடும்பத்திற்கு  ஒரு வாரிசு  இருந்தால்  போதும் என்று  நினைக்கிறோம். முன்னோர்  அப்படி  நினைத்ததாகத்  தெரியவில்லை. அப்படி நினைத்திருந்தால் நான் இந்த உலகத்தில் ஜனித்திருக்கவே முடியாது. அதை நினைத்தாலும்  பகீர் என்றுதான்  இருக்கிறது. இருந்தாலும்  எனக்கு  ஒரு வாரிசுதான். என்னால்  இயன்றவரை  இந்தியாவின் ஜனத்தொகையைக் குறைத்திருக்கிறேன்.

1986ல் +2 முடித்துவிட்டு முன்னொரு ஏப்ரல் மாதத்தில் ஏகப்பட்டக்  கனவுகளுடன் அண்ணன் குருவுடன் நாகப்பட்டினத்திலிருந்து பஸ் ஏறினேன். காலையில் சென்னை பாடியிலுள்ள ஸ்ரீனிவாச நகரில் காலடி வைத்தேன். ஒரு அண்ணனுடன்  சென்னை வந்து மூத்த அண்ணனின்  வீட்டிலிருந்து மேற்படிப்பு என்பதுதான்  திட்டம். என்னை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அண்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். என்னென்னவோ கனவுகள். நன்றாக  படித்து  நல்ல  வேலைக்கு சென்று எல்லோருக்கும் உதவவேண்டும் என்பதுதான் அப்போதைய என்னுடைய குறிக்கோளாக இருந்தது. காரணம் குடும்பத்தின் வறுமை. ஊரிலிருந்த ஒரே அண்ணனின் உழைப்பில் குடும்பமே வாழ்ந்து கொண்டிருந்த சூழல்.

ஒரு வழியாக  இரண்டு நாட்கள் பாடி வாழ்க்கையை முடித்து பெரம்பூருக்கு மூத்த  அண்ணன் வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். அவர் பெரம்பூரிலுள்ள  ஒரு பள்ளியில்  தமிழாசிரியர். அந்த  நம்பிக்கையில்தான் சென்னையே  வந்தேன். ஆசிரியர்களுக்கு  அறிவு அதிகம் என்பது முட்டாள்தனம் என்பது பின்னாளில்தான் என்னால் உணர முடிந்தது.  பத்துநாட்களில் கல்லூரி  செல்லும் கனவுகளுடன் மூன்று மாதங்கள் கனவிலேயே கழிந்தது. "காலேஜ் போறதெல்லாம் வேஸ்ட். கரஸ்பாண்டன்ஸ்ல சேர்த்துவிடறேன். வீட்டிலிருந்தே நன்றாக படிக்கலாம்." இது எனது வாத்தியார் அண்ணனின்  அறிவுரை. சரி அண்ணன் சொன்னால்  சரியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் மெட்ராஸ் யூனிவர்சிட்டி அட்மிஷன் முடியும் தருவாயிலும் என்னை கல்லூரியில் சேர்க்கும்  எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.

மே மாதம் தாண்டியதும்தான் வாத்தியாரின் திட்டமே  எனக்குப் புரிந்தது. வீட்டுக்கு  வேலைக் காரன் கிடைத்ததுடன் வீட்டில் நடக்கும் டியூஷன் பார்த்துக் கொள்ள ஒரு ஏமாளியாக ஆனேன் என்பது. அப்பாவிடம் கம்ப்ளைன்ட் செய்து, வாத்தியாரின் மனைவியிடம் கெஞ்சிக் கூத்தாடி  ஒருவழியாக B.Com., சேர்ந்தேன். ஆறுமாதங்கள் கடந்தும் ஒரு வகுப்புக்கும் செல்லமுடியாமல் நேரமின்றி கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர்  அடித்து  கொடுப்பதற்கும், குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கும், மாலை நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட டியூஷன் பசங்களை மேய்ப்பதிலுமே நேரம் போனது.

இறுதியில் பொறுமையிழந்து, என்னை Electronics Class சேர்த்துவிடு' என்று முகப்பேரில் இருந்த இன்னொரு  அண்ணனிடம் போனேன். அவரின் இயலாமையிலும் எனக்கு  மாதம் ஐநூறு ரூபாய்க் கொடுத்து வகுப்பில் சேர்த்துவிட்டார். மாலையில் இரண்டு மணிநேரம். மற்ற நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் வாத்தியாரின் இன்னொரு தொழிலான போட்டோ எடுப்பதில் அவ்வப்போது மவுண்ட் ரோடு சென்று பிரிண்ட் போடும் இடம் என் கண் முன் வந்தது. உடனே மவுண்ட் ரோடு கிளம்பி அந்த கடையில்  வேலை இருந்தால் கொடுங்கள் என்றேன். சம்பளமெல்லாம் இல்லை. முதலில்  வேலைக் கற்றுக் கொள் என்றார்கள். சரி என்று சேர்ந்தேன். அதற்கு போய் வரும் செலவு பாடி அண்ணன் வசம். 

ஒருவழியாக பெரம்பூரில்  ஆறுமாதம், முகப்பேரில்  ஆறுமாதம் பிழைப்புக்கு  வழிதேடிக் கொண்டபின் எனது  திறமை காரணமாக நாகராஜ ராவ் அவர்களிடம் வேலைக்கு சேர்ந்து அப்பப்பா முப்பதாண்டுகள் ஓடிவிட்டன... ! வாழ்க்கை நினைப்பதுபோல  இருப்பதில்லை.

இப்போது  நானும் ஒரு ஒளிப்படக் கலைஞன்..!!!!